ஈரோடு மாவட்டத்தில் குறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாக ரூ.6½ கோடி மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது
குறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாக கூறி ரூ.6½ கோடி மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புகார் மனு
ஈரோடு ஆர்.என்.புதூர் அமராவதிநகர் முதல்தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 39) . பவானி அரசு தொடக்க பள்ளிக்கூட ஆசிரியை. இவர் கடந்த மாதம் 18-ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
ஈரோடு விஜயமங்கலம் தாசம்பாளையத்தை சேர்ந்தவரும், எம்.எஸ்.பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளருமான சண்முகம் என்பவர் குறைந்த விலையில் வீடு கட்டி கொடுப்பதாக தெரிவித்தார். மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் 50 சதவீத மானியத்தை பெற்று தருவதாகவும், அதனால் ஒரு சதுர அடிக்கு ரூ.750 கொடுத்தால் போதும் என்றும் ஆசை வார்த்தை கூறினார்.
கட்டுமான பணி நிறுத்தம்
எனக்கு சொந்தமான 4 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் கீழ்தளம், மேல்தளம் அமைப்பதற்காக ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்று அவர் தெரிவித்தார். அவரை நம்பி ரூ.33 லட்சத்தை கொடுத்தேன். அதன்பிறகு கட்டுமான பணியை தொடங்கிய அவர், சில நாட்களில் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்று கூறி பணியை நிறுத்திவிட்டார். அதன்பிறகு அவர் பல்வேறு காரணங்களை கூறி வந்தார். ஆனால் கட்டுமான பணியை அவர் மீண்டும் தொடங்கவில்லை.
அவரது அலுவலகத்துக்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு கிடந்தது. சண்முகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. எனவே வீடு கட்டி தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
ரூ.6½ கோடி
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனிடம் கொடுத்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
போலீசாரின் விசாரணையில், கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை வீடு கட்டி தருவதாக கூறி ஈரோடு, பவானி, குமாரபாளையம், அத்தாணி, விஜயமங்கலம், பள்ளிபாளையம், திருப்பூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 57 பேரிடம் சுமார் ரூ.6½ கோடியை சண்முகம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இந்தநிலையில் எம்.எஸ்.பில்டர்ஸ் நிறுவன உரிமையாளரான சண்முகம் (32) ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் நின்று கொண்டிருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து சண்முகத்திடம் இருந்து ரூ.10 ஆயிரம், சரக்கு ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சண்முகத்தின் மனைவி மேனகபிரியா, எம்.எஸ்.பில்டர்ஸ் மேலாளர் சுரேஷ், மேஸ்திரிகள் உதயகுமார், குணசேகரன், நவீன் ஆகிய 5 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story