ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ் கொண்டு வர வேண்டும் - 25-ந் தேதி முதல் அனுமதி அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ் கொண்டு வர வேண்டும் - 25-ந் தேதி முதல் அனுமதி அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
x
தினத்தந்தி 10 Jan 2021 12:40 PM GMT (Updated: 10 Jan 2021 12:40 PM GMT)

திருவண்ணாமலையி்ல் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், முன்னாள் படைவீரர் நலத்துறை, மகளிர் திட்டம், சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, விளையாட்டுத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகளின் மூலமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்தும் விண்ணப்பித்து உள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் அவர்களுக்கான அனுமதி அட்டையை வருகிற 25-ந் தேதி முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுமதி அட்டை அனுப்பப்படும். தமிழ்நாடு அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகாமில் கலந்து கொள்வதற்கு தினமும் 2 ஆயிரம் பேர் அனுமதிக்கபடுவார்கள், 500 பேராக பிரிக்கப்பட்டு ஓட்டப்பந்தயம் தேர்வு நடைபெறும்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் 4 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவு சான்றிதழ், அனுமதி அட்டையுடன் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்.

இந்த முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கும், முகாம் நடைபெறும் கல்லூரிக்கு தேவையான போக்குவரத்து வசதி, குறைந்த விலையில் உணவகம், தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். அப்படி யாராவது இடைத்தரகர்கள், தனி நபர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என அணுகினால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இதற்கான விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலமாக மேற்கொள்ளப்படும்.

இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் சென்னை மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் மூலம் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இத்தேர்வு குறித்த தேதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விரவங்களுக்கு 044 - 25674924, 25674925 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் கவுரவ் சேத்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சந்திரா, திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, திருவண்ணாமலை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அரவிந்தன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சீ.விஜயகுமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story