திருப்பத்தூரில், மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி ; டாக்டர் உள்பட 2 பேர் கைது - நர்சு உள்பட 3 பேர் தலைமறைவு


திருப்பத்தூரில், மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி ; டாக்டர் உள்பட 2 பேர் கைது - நர்சு உள்பட 3 பேர் தலைமறைவு
x
தினத்தந்தி 10 Jan 2021 2:36 PM GMT (Updated: 10 Jan 2021 2:36 PM GMT)

மருத்துவசீட் வாங்கி தருவதாக கூறி தர்மபுரியை சேர்ந்தவரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த அரசு டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களது மகள் நர்மதா (வயது 20) கடந்த 2018-ம் ஆண்டு பிளஸ்-2முடித்தார். அவர் மருத்துவ படிப்பில் சேருவதற்காக பலமுறை முயன்றும் ‘சீட்’ கிடைக்கவில்லை. மகளுக்கு எப்படியாவது மருத்துவ ‘சீட்’ வாங்கி விட வேண்டும் என்ற உறுதியில் புஷ்பவள்ளி இருந்தார்.

திருப்பத்தூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 54) தர்மபுரி மாவட்டம் நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓமியோபதி டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் புஷ்பவள்ளி சிகிச்சைக்காக சென்றபோது புஷ்பவள்ளியின் குடும்பம் குறித்தும் விசாரித்தார்.

அப்போது தனது குடும்பத்தை பற்றி கூறிய புஷ்பவள்ளி, மகள் நர்மதாவுக்கு டாக்டர் படிப்புக்கு சீட் வாங்க முயன்றும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்போது டாக்டர் ரவிச்சந்திரன், தனக்கு சென்னை தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் நல்ல செல்வாக்கு உள்ளது. 27 லட்சம் ரூபாய் கொடுத்தால் மருத்துவம் படிக்க ‘சீட்’ வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய புஷ்பவள்ளி திருப்பத்தூருக்கு வந்து டாக்டர் ரவிச்சந்திரனை மீண்டும் சந்தித்தார். அப்போது ரவிச்சந்திரனின் மைத்துனர் ராஜ் மகன் வெங்கடேசன் (44) புதுப்பேட்டை கிராமம் அம்மனாங்கோவில் பகுதியைச் சேர்ந்த சபாபதி மகன் சரவணன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் ரவிச்சந்திரனின் சகோதரி ராஜேஸ்வரி, சரவணன் மனைவி விந்தியா ஆகிேயார் அறிமுகமாயினர்.

டாக்டர் ரவிச்சந்திரன் கூறியபடி பல தவணைகளில் 27 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார் ஆனால் பலமுறை தனது மகளுக்கு மருத்துவர் சீட் கேட்டும் வாங்கிக் கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்தனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புஷ்பவள்ளி அது குறித்து திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் விசாரணை நடத்தியபோது புஷ்பவள்ளி பணம் கொடுத்து ஏமாந்தது உறுதியானது.இதனையடுத்து ஓமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன், அவரது மைத்துனர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். நர்சு ராஜேஸ்வரி, சரவணன், விந்தியா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Next Story