குடியாத்தம் அருகே, காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 18 பேர் காயம் - மோதலில் ஒரு காளை பலி


குடியாத்தம் அருகே, காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 18 பேர் காயம் - மோதலில் ஒரு காளை பலி
x

குடியாத்தம் அருகே காளை விடும் திருவிழா நடந்தது. அதில் மாடுகள் முட்டி 18 பேர் காயம் அடைந்தனர். காளைகள் மோதலில் ஒரு காளைமாடு பலியானது.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 106-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. அதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் ஆகிய பகுதிகளை ேசர்ந்த 170 காளைகள் பங்கேற்றன.

காளைகளின் உரிமையாளர்கள் கொரோனா பரிசோதனை சான்றை கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பித்ததும் காளை விடும் திருவிழாவில் காளைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். காளைகள் ஓடும் வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக கால்நடை மருத்துவர்கள் காளைகளை மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

காளை விடும் திருவிழாக்கு ஊர் முக்கிய பிரமுகர்கள் ராமரத்தினம், முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குசலகுமாரிசேகர் வரவேற்றார். போட்டியை மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.பானு, குடியாத்தம் தாசில்தார் வத்சலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். துணைத் தாசில்தார் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. அதில் காளைகள் முட்டி 18 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 பேருக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவிழா தொடங்கிய சிறிது நேரத்தில் கல்லப்பாடியைச் சேர்ந்த ஒரு காளை சீரிப்பாய்ந்து ஓடியது. ஆனால் அந்தக் காளை திரும்பி புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் ஓடியது. அந்த நேரத்தில் குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த சரவணனின் காளை ஓடியது. அப்போது இரு காளைகளும் நேருக்குநேர் மோதிக்கொண்டு கீழே விழுந்தன. கல்லப்பாடி காளை எழுந்து ஓடி விட்டது.

சேங்குன்றம் சரவணனின் காளை எழவில்லை. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் காளை உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால் காளையின் உரிமையாளர்கள் சோகத்தில் மூழ்கினர். காளைகள் ஓடும் வழியில் சவுக்கு கட்டையால் தடுப்புகள் அமைத்து இருந்தனர். தடுப்புகளை தாண்டி காளைகள் ஓடும் பகுதியிலே மக்கள் நின்று கூச்சலிட்டபடி வேடிக்கை பார்த்தனர். இதனால் காளைகள் ஓடுவதற்கு பயந்து புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்ததால் உயிர்சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story