கிள்ளியூர் தொகுதியில் கூடுதல் இடங்களில் பொங்கல் பரிசு வழங்காவிட்டால் போராட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு


கிள்ளியூர் தொகுதியில் கூடுதல் இடங்களில் பொங்கல் பரிசு வழங்காவிட்டால் போராட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2021 4:13 AM GMT (Updated: 2021-01-17T09:43:45+05:30)

கிள்ளியூர் தொகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் இடத்தில் கூட்ட நெரிசலால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் இடங்களில் பொங்கல் பரிசு வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

கருங்கல், 

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்து ஓய்வூதியம் பெறும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்தாண்டு முதல்முறையாக தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது.

அதன்படி பச்சரிசி 2 கிலோ, சிறுபருப்பு 1 கிலோ, எண்ணெய் 500 மில்லி, நெய்-100 கிராம், சர்க்கரை 1 கிலோ, ஏலக்காய் 5 கிராம், முந்திரி 25 கிராம், உலர் திராட்சை 25 கிராம் மற்றும் ஆண்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரம், பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே இடத்தில்...

பொங்கல் பரிசு பெற தகுதியானவர்கள் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் ஏராளமானோர் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் அதாவது தற்போது காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள பள்ளியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் மத்திகோடு, கருங்கல், பாலப்பள்ளம், வழுதலம்பள்ளம், கீழ்குளம், மிடாலம், ஆலஞ்சி,

வெள்ளியாவிளை, மேல்மிடாலம், இனையம், கிள்ளியூர், மங்காடு, திப்பிறமலை, முள்ளங்கினாவிளை, வாவறை, குளப்புறம், அடைக்காகுழி, மெதுகும்மல், நடைக்காவு, கொல்லங்கோடு, முஞ்சிறை போன்ற பகுதிகளில் உள்ள நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் காஞ்சாம்புறம் பள்ளிக்கு சென்று பொங்கல் பரிசு பெற முடியாமல் மணிக்கணக்கில் காத்துகிடக்கின்றனர்.

நோய் பரவும் அபாயம்

கொரோனா தொற்று காலகட்டமான இப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அரசின் இலவச பொங்கல் பொருட்கள் வழங்குவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மற்ற சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தபட்சம் 4 அல்லது 5 இடங்களில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

கிள்ளியூர் யூனியனில் 13 வருவாய் கிராமங்கள், முஞ்சிறை யூனியனில் 14 வருவாய் கிராமங்கள் என 27 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வளவு பெரிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய கிள்ளியூர் தொகுதியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பொங்கல் பரிசு வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாது.

முற்றுகை போராட்டம்

எனவே கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட பதிவு செய்த அனைத்து கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் எளிதில் பொங்கல் பரிசு பெற வசதியாக கருங்கல் அரசு மேல்நிலை பள்ளி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, வாவறை பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் ஆகிய 3 இடங்களில் பொங்கல் பரிசு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கோணத்தில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் எனது தலைமையில் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

குமரி மாவட்டத்தில் பதிவு செய்த 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story