அரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.16 லட்சம் மோசடி ஓய்வு பெற்ற அதிகாரி கைது


அரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.16 லட்சம் மோசடி ஓய்வு பெற்ற அதிகாரி கைது
x
தினத்தந்தி 18 Jan 2021 12:34 AM GMT (Updated: 18 Jan 2021 12:34 AM GMT)

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கோவை, 

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தார். அப்போது ரத்தினபுரி மருதுகுட்டி நகரை சேர்ந்த சேகர் (62) என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர், மண்டல கல்வி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில் சேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் குமாரிடம் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.21 லட்சம் ஆகும் என்றும் கேட்டுள்ளார்.

அதை நம்பிய சதீஷ்குமார், சேகரிடம் ரூ.21 லட்சத்தை கொடுத்தார். ஆனால் சேகர் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை.

ரூ.16 லட்சம்

இது பற்றி அவரிடம் சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் வேலை வாங்கித் தர வில்லை. இதனால் சதீஷ்குமார் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து சேகர் ரூ.5 லட்சத்தை மட்டும் திரும்ப கொடுத்துள்ளார். மீதி ரூ.16 லட்சத்துக்கு காசோலை கொடுத்துள்ளார்.

அதை சதீஷ்குமார் வங்கியில் செலுத்திய போது காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டதாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்..

ஓய்வு பெற்ற அதிகாரி கைது

விசாரணையில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சேகர் ரூ.16 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஓய்வு பெற்ற அதிகாரி சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் இது போல் வேறு யாரிடமாவது மோசடி செய்து உள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story