பொங்கல் பண்டிகை முடிந்ததால் வெளியூர் செல்ல குவிந்த மக்கள்; பஸ்களில் கூட்டம் அலைமோதியது

பொங்கல் பண்டிகை முடிந்ததால் வெளியூர் செல்ல மக்கள் குவிந்ததால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
தஞ்சாவூர்,
தைப்பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தஞ்சை மாவட்டத்திற்கு வந்தனர். வெளியூரில் இருந்து வருபவர்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றியும், இடையூறு இன்றியும் வருவதற்கு ஏற்ப சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அப்படி வெளியூரில் இருந்து வந்தவர்கள் பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடினர். பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்றனர். பொங்கல் பண்டிகை முடிந்ததையொட்டி மீண்டும் தாங்கள் வேலை பார்க்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஏராளமானோர் நேற்றுமதியம் முதலே தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
பஸ்களில் கூட்டம்
இவர்கள் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் இயக்கப்பட்டன. பஸ்கள் அதிகஅளவில் இயக்கப்பட்டாலும் ரெயில்கள் முழுமையாக இயக்கப்படாததால் கூட்டம் அதிகஅளவில் இருந்தது. இருந்தாலும் உடனுக்குடன் பஸ்கள் இருந்ததால் எல்லா பஸ்களும் அதிக கூட்டத்துடன் வெளியூரை நோக்கி புறப்பட்டு சென்றது.
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து நேற்று பகல் நேரத்தில் 9 விரைவு பஸ்களும், இரவு நேரத்தில் 12 விரைவு பஸ்களும் என மொத்தம் 21 பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துவிட்டது. அதேபோல் நாகர்கோவில், திருப்பதிக்கு சென்ற விரைவு பஸ்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது.
காத்திருந்த பயணிகள்
இதனால் சென்னைக்கு செல்வதற்காக ஏராளமானோர், பஸ்கள் கிடைக்காமல் காத்து இருந்தனர். ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டதால் எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என பலர் காத்து இருந்தனர். சிலர், கூடுதலாக டிக்கெட் கொடுத்து பஸ்சில் பயணம் மேற்கொண்டனர்.
கும்பகோணம் கோட்டம் சார்பிலும் சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தாலும் பலர், பஸ்கள் கிடைக்காமல் தவித்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் பணியில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஈடுபட்டனர். தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story