செங்கல்பட்டு மாவட்டத்தில், வசூல் பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்ற போது துணிகரம்: டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு அரிவாள் வெட்டு; ரூ.8 லட்சம் கொள்ளை


செங்கல்பட்டு மாவட்டத்தில், வசூல் பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்ற போது துணிகரம்: டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு அரிவாள் வெட்டு; ரூ.8 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 19 Jan 2021 2:15 AM IST (Updated: 19 Jan 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

செய்யூர் அருகே டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்ற போது, வழிமறித்த கொள்ளையர்கள் மேற்பார்வையாளரை வெட்டி ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

டாஸ்மாக் மேற்பார்வையாளர்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடுக்கப்பட்டு கிராமத்தில் உள்ள கூவத்தூர்-மதுராந்தகம் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக இரும்பேடு கிராமம் பிள்ளையார் கோவிலை சேர்ந்த சுரேஷ் குமார் (வயது 46), என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர், பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக தனது கடையில் வசூலான ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது நண்பரான சங்கர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பவுஞ்சூரில் இருந்து செய்யூர் செல்லும் வழியாக அம்மனூர் அருகே சென்ற போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமார் வந்த வாகனத்தை வழிமறித்தது. இதையடுத்து, அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரின் கழுத்து, தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதன் காரணமாக சரிந்து விழுந்த அவர் பையில் வைத்திருந்த ரூ.7.80 லட்சத்தை பறித்து தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த மேற்பார்வையாளர் சுரேஷ் குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதைத்தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா தலைமையில் போலீசார் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உடன் சென்ற சுரேஷ்குமாரின் நண்பர் சங்கர் எந்த காயமின்றி உயிருடன் தப்பியதாக தெரிகிறது.

Next Story