கோவை தெற்கு மண்டல பகுதியில் ரூ.2½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்


ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தபோது எடுத்த படம்.
x
ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தபோது எடுத்த படம்.
தினத்தந்தி 18 Jan 2021 10:42 PM GMT (Updated: 18 Jan 2021 10:42 PM GMT)

கோவை தெற்கு மண்டல பகுதியில் ரூ.2½ கோடியில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி திட்டப்பணிகள்
கோவை தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டங்களுக்கான பூமி பூஜை மற்றும் முடிந்த பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். 89-வது வார்டு காசிநாத் கார்டன் பகுதியில் ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் செலவில் விளையாட்டு வளாகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. தியாகராஜா நகரில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கட்டிடத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

91-வது வார்டு கல்கி கார்டனில் மாநகராட்சி சார்பில் ரூ.65 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.

தார்சாலைகள்
மேலும் பல்வேறு இடங்களில் தார்சாலை அமைப்பதற்கான பூமிபூஜையும் நடைபெற்றது. 90-வது வார்டு ஹவுசிங் யூனிட், சாந்தி ஆசிரமம் சாலை, ஹவுசிங் யூனிட் ஆர்பிளாக், லட்சுமி நகர், மீனாட்சி நகர், 89 -வது வார்டு மருதம் நகர், சமீம்கார்டன், மருத்துவமனை சாலை, அண்ணாநகர், 91-வது வார்டு ஓம் சக்திநகர், காமாட்சி நகர், ஜே.ஆர்.டி. கார்டன், விஷால் எஸ்டேட், கோகுலம் காலனி, குளத்துப்பாளையம் மெயின்ரோடு, வசந்தம் நகர், கல்கி கார்டன் உள்ளிட்டபகுதிகளில் மொத்தம் ரூ.2 கோடியே 54 லட்சம் செலவில் தார்சாலைகள் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி, என்ஜினீயர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி உள்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story