பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டில் 23 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் திருட்டு? போலீசார் விசாரணை
பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டில் 23 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருட்டு போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி புது ஆத்தூர் சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (வயது 59). விவசாயியான இவர் கடந்த 16-ந்தேதி தனது குடும்பத்தினருடன் அடுத்த தெருவில் வசிக்கும் அவருடைய சகோதரர் சபியுல்லா வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அபுபக்கர் பொருட்கள் எடுப்பதற்காக தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகை-பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. பீரோவில் இருந்து 23 பவுன் நகையும், ரூ.40 ஆயிரமும் திருட்டு போனதாக அபுபக்கர் தெரிவித்தார். மேலும் இது குறித்து அபுபக்கர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அபுபக்கர் வீட்டில் 11 பவுன் நகையும், ரூ.10 ஆயிரமும் திருட்டு போனதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அபுபக்கர் வீட்டில் திருட்டு போன நகை- பணத்தின் மொத்த மதிப்பு என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சமீப காலமாக பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story