கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்
கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 398 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
கனமழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விதமான வங்கிகளிலும் விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். அரசு அறிவித்த பேரிடர் நிவாரண நிதி எக்டேருக்கு ரூ.20 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.
திருவாரூர்
திருவாரூர் அருகே மாவூர் கடைவீதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.
மறியல் காரணமாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ோராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், நகர செயலாளர் ஜோசப், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூசாந்திரம், அண்ணாதுரை, முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, காளியப்பன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் பாகுபாடின்றி கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் நீடாமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
அதே கோரிக்கையை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். இதில் பயிர் இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
கோட்டூர்
கோட்டூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல் நடந்தது. போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராசு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோவிந்தராசு, கல்யாணசுந்தரம், ரெகுபதி, அறிவின் செல்வம், ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொரடாச்சேரி
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பயிர்க்காப்பீட்டு தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தம்புசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தால் திருவாரூர், தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் செல்லும் சாலைகளில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
398 பேர் கைது
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 398 பேரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகயை வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மன்னார்குடி பெரியார் சிலை முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் அழுகிய நெற்பயிர்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.பூபதி, நகர செயலாளர் ஜி.மீனாம்பிகை ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பி.பாஸ்கரவள்ளி, ஒன்றிய குழு துணைதலைவர் வனிதா அருள்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் ஈஸ்வரி, நகர தலைவர் மல்லிகா மற்றும் நிர்வாகிகள் லெட்சுமி, அனுசியாதேவி உள்பட பலர் அழுகிய நெற்பயிர்களுடன் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story