அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு; கர்நாடகத்தில் ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்க்க இலக்கு; மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர்
கர்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் புதிய தொழில் கொள்கையை வெளியிட்டு மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில் கொள்கை
பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2020-25-ம் ஆண்டுக்கான கர்நாடகத்திற்கு புதிய தொழில் கொள்கை தொடர்பான புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கலந்து கொண்டார். பின்னர் அவர், 2020-25-ம் ஆண்டுக்கான கர்நாடகத்தின் புதிய தொழில் கொள்கை தொடர்பான புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:-
ரூ.5 லட்சம் கோடி முதலீடுகர்நாடகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 2020-25-ம் ஆண்டுக்கான புதிய தொழில் கொள்கையை அரசு உருவாக்கி உள்ளது. இந்த புதிய தொழில் கொள்கையை சரியான முறையில் அமல்படுத்தி செயல்படுத்த அரசு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இந்த புதிய தொழில் கொள்கை மூலமாக கர்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 20 லட்சம் பேருக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் கொள்கையை கர்நாடகத்தில் அமல்படுத்த காரணமாக இருந்த முதல்-மந்திரி எடியூரப்பா, மற்ற துறைகளை சேர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மிகப்பெரிய சாதனை படைக்கும்புதிய தொழில் கொள்கை மூலமாக கர்நாடகத்தை மாதிரி மாநிலமாக மாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த புதிய தொழில் கொள்கை கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு 13-ந் தேதியில் இருந்தே அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் அல்லது மற்றொரு தொழில் கொள்கை கொண்டு வரும் வரை, இந்த புதிய கொள்கை அமலில் இருக்கும். இதன் மூலம் தொழில் துறையில் கர்நாடகம் மிகப்பெரிய சாதனையை படைக்கும்.
பெங்களூருவில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டதாலும், இங்கு போதிய நில வசதி இல்லாததாலும், பெங்களூருவுக்கு அடுத்ததாக 2-ம் மற்றும் 3-ம் நிலையில் உள்ள நகரங்களில் தொழில்துறை வளர்ச்சி அடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, கொப்பல் மாவட்டத்தில் விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, உப்பள்ளி-தார்வார், யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் 5 தொழில்பேட்டைகள் வளர்ச்சி அடையும்.
கன்னடர்களுக்கு முக்கியத்துவம்வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்தல், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், பேட்டரி வாகனங்கள் தயாரித்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய தொழில் கொள்கை மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நவீன தொழில் நுட்பங்களை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலையான, சீரான, அனைத்தும் உள்ளடக்கிய தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சிறுதொழில்துறை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். தொழில்துறைக்கு தேவையான நிலங்களை எளிமையாக கையகப்படுத்தவும், அதனை தொழில் முதலிட்டாளர்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இன்றி வழங்கவும் புதிய தொழில் கொள்கை உதவிகரமாக இருக்கும். தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். 70 சதவீதம் முதல் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம்தொழில்துறை வளர்ச்சிக்காக பெங்களூரு-சென்னை தொழில்துறை காரிடாரின் ஒரு பாகமாக, துமகூருவிலும் தொழில்துறை காரிடார் அமைக்க மத்திய அரசு ரூ.1,701 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 88 ஆயிரத்து 500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கர்நாடக அரசு சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அரசின் வரி வருவாயை உயர்த்துவது, தொழில்துறையில் வளர்ச்சி அடைவது கர்நாடக அரசின் ஒரே குறிக்கோளாகும். கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், அரசின் நிதி நிலைமையை சீர்படுத்தவும் கர்நாடக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
கர்நாடகம் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக இருக்கிறது. மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு தொழில்துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும், கொள்கையில் மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. தொழில்துறையில் தனியாரின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும். புதிய தொழில் கொள்கை மூலம் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு வழி வகுக்கப்படும். சர்வதேச அளவில் தொழில் வர்த்தகத்தில்கர்நாடகத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரை ரூ.58 ஆயிரத்து 204 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடு கர்நாடகத்திற்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக அரசின் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ்குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.