தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் தண்ணீரை அகற்றக்கோரி மக்கள் சாலைமறியல் + "||" + Road blockade in Thoothukudi demanding removal of water
தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் தண்ணீரை அகற்றக்கோரி மக்கள் சாலைமறியல்
தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, தேங்கிக்கிடக்கும் தண்ணீரை அகற்றக்கோரி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. 6 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் தூத்துக்குடி மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அனைத்து தெருக்களும் தனித்தனி தீவுகளாக மாறின. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக போலீசாரின் உதவியுடன் படகில் சென்று வரும் நிலை ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக வெயில் அடித்த போதிலும் மழைநீர் வடியாத நிலையே உள்ளது.
மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டாலும், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் வெள்ளம் சூழ்ந்தே உள்ளது. வடியாத மழைநீரால் மக்கள் கண்ணீர் வடிக்கும் துயரநிலை உருவானது.
தொற்று நோய் அபாயம்
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, வி.எம்.எஸ். நகர், ராம் நகர், பிரையண்ட் நகர், சிதம்பரநகர், போல்பேட்டை மேற்கு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி கிடப்பதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தை வடிய வைக்க வேண்டும். தொற்று நோய் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்ைககளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மழைநீரை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் தினமும் பல்வேறு இடங்களிலும் சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலைமறியல்
தூத்துக்குடி நேதாஜிநகர், வி.எம்.எஸ்.நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே சிப்காட் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உருக்குலைந்த சாலை
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அந்த சாலை முழுவதும் வெள்ளத்தில் உருக்குலைந்து ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
இதனால் அந்த வழியாக பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான பஸ்கள் மதுரை பைபாஸ் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். தூத்துக்குடி மாநகரில் வெள்ளம் வடிவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? என்று மக்கள் வேதனையுடன் உள்ளனர்.