‘நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டரை கொன்றேன்’; கூட்டாளிகளுடன் போலீசில் சரண் அடைந்தவர் வாக்குமூலம்


கொலை செய்யப்பட்ட பொன்னுரங்கம்
x
கொலை செய்யப்பட்ட பொன்னுரங்கம்
தினத்தந்தி 21 Jan 2021 4:13 AM IST (Updated: 21 Jan 2021 4:13 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டரை வெட்டிக்கொன்றதாக கூட்டாளிகளுடன் போலீசில் சரண் அடைந்தவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர் கொலை

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 55). கேபிள் டி.வி. ஆபரேட்டரான இவர், நேற்று முன்தினம் தனது மகன் தானேஸ்வரனுடன் மோட்டார் சைக்கிளில் மதனந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் பொன்னுரங்கத்தை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதை தடுக்க வந்த அவரது மகனுக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக பூந்தமல்லியை சேர்ந்த யாசிம் (45), தனது கூட்டாளிகளான சதாம் உசேன் (25), உமர்பாஷா (31), காதர் பாஷா (48), விக்னேஷ்வரன் (23), முனுசாமி (20), காலா (23), சுரேஷ் (28), அனீபா (28) ஆகியோருடன் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். 9 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைதான யாசிம், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நிலத்தகராறு

மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள ஒரே இடத்தை நானும், பொன்னுரங்கத்தின் உறவினரும் வாங்கி உள்ளோம். அந்த இடம் தங்களுக்குதான் சொந்தம் என்று எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நான் இந்த இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

எங்களுக்குள் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையில் பொன்னுரங்கம் தரப்பினர் என்னை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். இதனால் நான் முந்திக்கொண்டு எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பொன்னுரங்கத்தை வெட்டிக்கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 9 பேரிடம் இருந்தும் அவர்கள் பயன்படுத்திய பயங்கர ஆயுதம் மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story