ஆவடி அருகே பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகனை கொலை செய்த மாமியார்; ஒரு வருடத்துக்கு பிறகு கைது
ஆவடி அருகே மருமகன் கொலை வழக்கில் ஒரு வருடம் கழித்து அவரது மாமியாரை போலீசார் கைது செய்தனர். தனக்கும், இளையமகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொன்றது விசாரணையில் உறுதியானது.
வாலிபர் கொலை
சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் வி.ஆர். பிள்ளை தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது ). இவர், கடந்த 10-10-2019 அன்று ஆவடியை அடுத்த கொள்ளுமேடு ஆர்ச் அந்தோணி நகர் அருகே உள்ள ஒரு மைதானத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக், குமார், அரவிந்த் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரகாசை கொலை செய்தது தெரிந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாலியல் தொல்லைகைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரகாஷ் தனது மாமியார் மற்றும் மைத்துனிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அதனால் பிரகாஷின் 40 வயதான மாமியாரின் தூண்டுதலின் பேரில் 3 பேரும் சேர்ந்து பிரகாசை மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதிக்கு அழைத்துச்சென்று கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்து இருந்தனர்.
அதன்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தனக்கும், இளைய மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்கள் 3 பேர் மூலம் மருமகன் பிரகாசை கொலை செய்தது உறுதியானது.
இதையடுத்து கொலை சம்பவம் நடந்து ஒரு வருடத்துக்கு பிறகு பிரகாசின் மாமியாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர்.