அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Jan 2021 11:27 PM GMT (Updated: 20 Jan 2021 11:27 PM GMT)

அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்று பொன்முடி எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் ஆதரவு

அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு, பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் இவை எல்லாவற்றையும் மக்கள் அறிந்து வைத்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு எப்படி உள்ளது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்கள் நடத்தி வரும் கிராம சபை கூட்டங்களின் மூலம் மக்களின் ஆதரவு எங்களுக்கு பெருகியிருக்கிறது. தி.மு.க.வை பற்றி குடும்ப ஆட்சி என்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதா எப்படி வந்தார். அதுபோல் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். இது வாரிசு இல்லையா? வாரிசுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. 3 சதவீதம் இப்படி கொடுப்பதில் தவறில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை உழைப்பு, நேர்மை, விசுவாசத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித நலப்பணிகளும் நடைபெறவில்லை. பாதாள சாக்கடை திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தேங்கும் நீர் வெளியேற்றப்படவில்லை. கோட்டக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை. மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவில்லை. மொத்தத்தில் இந்த ஆட்சியில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன், மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story