கொரோனாவுக்கு முதியவர் பலி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு தொற்று


கொரோனாவுக்கு முதியவர் பலி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 21 Jan 2021 6:18 AM IST (Updated: 21 Jan 2021 6:18 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 30-க் கும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 14 ஆயிரத்து 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 17-ந்தேதி சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முதியவர் பலி

அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அன்றே முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 148 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 829 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 140 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story