2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மத்திய ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை


2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மத்திய ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2021 2:17 AM IST (Updated: 22 Jan 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மத்திய ரிசர்வ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மீட்டுத்தர குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஸ்ரீீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள மணத்தியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அண்ணாதுரை (வயது 38). இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மராட்டிய பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் சி.எம்.எஸ். கோவில் தெருவை சேர்ந்த சுடலை மகள் தேவகனி (32) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கனிஷா (9) என்ற மகளும், நவீன் (6) என்ற மகனும் உள்ளனர். குழந்தைகளின் படிப்புக்காக இவரது குடும்பம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் பட்டு பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தனர்.

மாயம்

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அண்ணாதுரை சண்டிகாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் பாளையங்கோட்டைக்கு வந்து தனது குடும்பத்தினருடன் 10 நாட்கள் தங்கி இருந்தார். பின்னர் 29.6.2018 அன்று இரவு 9.10 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து ரெயிலில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

அவர் 30-ந்தேதி வரை மனைவியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகு அவரது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரை பற்றி தகவல் தெரியாமல் மனைவி தேவகனி தவித்து வந்தார்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி டெல்லி ெரயில் நிலையத்தில் அவரது பெட்டி மற்றும் பொருட்கள் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த தேவகனி, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் டெல்லி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

கோரிக்கை

தற்போது தேவகனி கருங்குளத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். அண்ணாதுரை காணாமல் போய் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவரை பற்றிய தகவல் இல்லாததால் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர. அவரை கண்டுபிடித்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story