கொரடாச்சேரி அருகே ஆற்றங்கரையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


கொரடாச்சேரி அருகே ஆற்றங்கரையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Jan 2021 2:48 AM IST (Updated: 22 Jan 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே ஆற்றங்கரையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே முகந்தனூரில் வெட்டாற்றங்கரை ஓரத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையின் பின்புறம் ஆற்றின் கரை ஓரத்தில் முகத்தில் காயங்களுடன் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயவியல் நிபுணர்கள் சோதனை

மேலும் தஞ்சாவூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறந்த நபர் அணிந்திருந்த சட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த டைலர் கடை கும்பகோணத்தில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் சட்டை தைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதால் அதன் மூலம் இறந்த நபர் யார்? என்பதை உடனடியாக கண்டறிய முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story