கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை


கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Jan 2021 9:22 PM GMT (Updated: 21 Jan 2021 9:22 PM GMT)

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பேடி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் அருகே உள்ள வடகாடு, வடகாடுகோவிலூர், கள்ளிக்குடி, அம்மனூர், கோட்டூர், நெடுவகோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆய்வின்போது பாதிப்பு குறித்த விவரங்களை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் ககன்தீப்சிங்பேடி கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நிவாரணம் கிடைக்க நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. புரெவி, நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட 96 ஆயிரத்து 165 எக்டேர் சம்பா, தாளடி பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் (ஜனவரி) பெய்த கனமழையினால் 51 ஆயிரத்து 3 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கணக்கெடுப்பு பணிகள் விரைவாக முடித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவகுமார், உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story