பணி நிரந்தரம் செய்யக்கோரி பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் 30 பேர் கைது


பணி நிரந்தரம் செய்யக்கோரி பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் 30 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2021 9:35 PM GMT (Updated: 21 Jan 2021 9:35 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

காரைக்காலில் உள்ள புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக 30 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் இது தொடர்பாக புதுச்சேரி அரசு எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காத நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பணிமனையில் அமர்ந்து அவர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை அவர்கள் திடீரென பஸ்களை வெளியே எடுக்க முடியாத அளவிற்கு பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

30 பேர் கைது

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த பயனும் ஏற்படவில்லை. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story