திருச்சி மாநகரில் 17 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது; சாலை பாதுகாப்பு மாத விழாவில் போலீஸ் கமிஷனர் பேச்சு
திருச்சி மாநகரில் 17 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது என்று சாலை பாதுகாப்பு மாத விழாவில் போலீஸ் கமிஷனர் கூறினார்.
‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம்
32-வது சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, மாநகர போலீசார், போக்குவரத்து துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இணைந்து ‘பெண்கள் பாதுகாப்பு-குடும்ப பாதுகாப்பு' என்ற பெயரில் பெண் போலீசார் மற்றும் அரசு பெண் பணியாளர்கள் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலம் ரெயில்வே ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நிலையம், பாரதிதாசன் சாலையில் மாநகராட்சி, கண்டோன்மெண்ட் எம்.ஜி.ஆர். சிலை வழியாக திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தைசென்றடைந்தனர்.
விழிப்புணர்வு பதாகை
ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம், சீட்பெல்ட் விழிப்புணர்வு, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகையும் எடுத்து செல்லப்பட்டது. ஹெல்மெட் ஊர்வலத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பொதுமக்கள் சற்று சிரமத்திற்குள்ளாகினர்.
ஊர்வலத்தின்போது போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறியதாவது:-
17 சதவீத விபத்து குறைவு
இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். 4 சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் ஆகிய இரு மிக முக்கிய சாலை விதிகளை வலியுறுத்தி இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சி மாநகரில் கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டில் 17 சதவீத சாலை விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது.மேலும் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
திருச்சி மாநகரில் அதிக அளவில் விபத்து நடந்ததாக 18 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் 1031 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலை விதிகளை மீறும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதோடு திருச்சி மாநகர எல்லைகளில் உள்ள காவல்துறை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story