திருப்பூருக்கு வருகை தரும் ராகுல்காந்தியை வரவேற்க திரண்டு வாருங்கள்; தொண்டர்களுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அழைப்பு


விழா ஏற்பாடுகளை கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பார்வையிட்ட போது
x
விழா ஏற்பாடுகளை கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பார்வையிட்ட போது
தினத்தந்தி 22 Jan 2021 9:20 AM IST (Updated: 22 Jan 2021 9:20 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பிரசாரத்திற்காக திருப்பூருக்கு நாளை வரும் ராகுல்காந்தியை வரவேற்க அணி திரண்டு வாருங்கள் என்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி நாளை (சனிக்கிழமை) மாலை திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் அவர் கோவையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் மதிய உணவை முடித்துக் கொண்டு கார் மூலமாக திருப்பூர் வருகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவினாசி ரோடு அனுப்பர்பாளையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் மாலை 3 மணிக்கு அனுப்பர்பாளையம்புதூரில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடி முன்பு திறந்த வேனில் நின்றபடி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து மாலை 4 மணிக்கு திருப்பூர் ரெயில்நிலையம் அருகில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் ராகுல்காந்தி, அதே இடத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதன் பின்பு மாலை 4.30 மணிக்கு பல்லடம் ரோடு ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார்.

திரண்டு வாருங்கள்
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அன்று இரவு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ராகுல்காந்தி தங்குகிறார். திருப்பூரில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு, செல்லக்குமார் எம்.பி. உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ராகுல்காந்தியை வரவேற்க கட்சியின் மாவட்ட, மாநகர, வட்டார, சர்க்கிள், மண்டல, வார்டு, கிளை நிர்வாகிகள் அணி திரண்டு வருவதுடன், அவருடைய பிரசார நிகழ்ச்சியில் தொழில்துறையினர், தொழிலாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் இரவு, பகலாக செய்து வருகின்றனர். ராகுல்காந்தி வருகையையொட்டி திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதேபோல் அவரை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் 2500 கொடிகள், வரவேற்பு பதாகை மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story