5 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


5 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Jan 2021 4:51 AM IST (Updated: 23 Jan 2021 4:51 AM IST)
t-max-icont-min-icon

5 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு,

கன்னட திரை உலகினர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து இருந்தனர். விசாரணை முடிந்த பின்னர் நடிகைகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பதை கண்டறிய சோதனையும் நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிறையில் இருந்தபடியே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ராகிணி, சஞ்சனா ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

மனு மீது விசாரணை

இதனையடுத்து ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் ராகிணியும், சஞ்சனாவும் மனுதாக்கல் செய்து இருந்தார்கள். அங்கேயும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஒருவழியாக சஞ்சனா, கர்நாடக ஐகோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் பெற்றார். ஆனால் ராகிணிக்கு மட்டும் ஜாமீன் கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ராகிணி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. பின்னர் மனு மீதான வழக்கின் விசாரணையை 21-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகிணி சார்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த், ராகிணி கைது செய்யப்பட்ட போது அவர் வீட்டில் இருந்து போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவரது நண்பர் ரவிசங்கர் கொடுத்த தகவலின்பேரில் தான் ராகிணியை போலீசார் கைது செய்தனர்.

மகிழ்ச்சியில் ராகிணி

இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் ராகிணிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை அழிக்க கூடும் என்று எதிர்தரப்பு வக்கீல் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இறுதியில் ராகிணிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் 4-ந் தேதி ராகிணியை போலீசார் கைது செய்து இருந்தனர். கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது. தனக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதால் ராகிணி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



Next Story