பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை சசிகலாவுக்கு கொரோனா தொற்று உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தகவல்


பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை சசிகலாவுக்கு கொரோனா தொற்று உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2021 4:58 AM IST (Updated: 23 Jan 2021 4:58 AM IST)
t-max-icont-min-icon

மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில்டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பெங்களூரு சிறையில்...

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மூச்சுத்திணறல்

இந்த நிலையில் சசிகலாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு வரும்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 79 சதவீதமாக இருந்தது. உடனே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்தனர். காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி.தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட அ.ம.மு.க.வினர் சிலர் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர், சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் ஆலோசனை செய்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் விளக்கி கூறினர்.

கையசைத்த சசிகலா

அதன் பிறகு மதியம் 2 மணியளவில் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சசிகலா, ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை சக்கர நாற்காலியில் வைத்து ஆஸ்பத்திரியின் உள்ளே இருந்து ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர்.

அப்போது கட்சியினரை பார்த்த அவர் தனது வலது கையை அசைத்து, தான் நலமுடன் இருப்பதை உணர்த்தினார். அதன் பிறகு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

போலீசார் குவிப்பு

சசிகலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதையொட்டி விக்டோரியா ஆஸ்பத்திரி முன்பு அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

டி.டி.வி.தினகரன் மட்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவர் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

மருத்துவ அறிக்கை

இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 63 வயதாகும் சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்றவை இருப்பது தெரியவந்தது. அவருக்கு நீண்டகால நுரையீரல் பாதிப்பும் (எஸ்.ஏ.ஆர்.ஐ.) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவருக்கு பவுரிங் மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இன்சுலின், ஹெபரின், ஸ்டெராய்டு போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிந்துரை அடிப்படையில் சசிகலா இன்று (அதாவது நேற்று) மதியம் 2.30 மணிக்கு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

நுரையீரலில் தீவிர தொற்று

அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சசிகலா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி

பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று அறிய ஆன்டிஜென் விரைவு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விக்டோரிய ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டி.டி.வி.தினகரன்

முன்னதாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சசிகலாவை பார்க்க வந்த டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘சசிகலா தற்போது நலமாகவும், அவரது உடல்நிலை சீராகவும் உள்ளதாக டாக்டர்கள் ஏற்கனவே எங்களிடம் தெரிவித்துள்ளனர். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவரது நுரையீரல் எப்படி உள்ளது என்பது குறித்து அறிய சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யுமாறு எங்கள் தரப்பினர் டாக்டர்களிடம் கூறினர்.

எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சசிகலாவுக்கு நல்ல முறையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அ.ம.மு.க. தொண்டர்கள் பயப்பட தேவை இல்லை. சசிகலாவை பார்க்க தொண்டர்கள் பெங்களூரு வருவதை தவிர்க்க வேண்டும். வருகிற 27-ந் தேதி விடுதலை ஆகும் நாளில் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story