நெல்லுக்கான காப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும் மத்திய மந்திரியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்


நெல்லுக்கான காப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும் மத்திய மந்திரியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2021 12:23 AM GMT (Updated: 23 Jan 2021 12:23 AM GMT)

நெல்லுக்கான காப்பீட்டு பிரிமீய தொகையை செலுத்த வேண்டும் என்று மத்திய வேளாண் மந்திரியிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அங்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து வேளாண் பயிர்களுக்கான காப்பீடு திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர்.

இதுகுறித்து புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம் ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டங்கள் குறித்து மத்திய மந்திரியிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் விளக்கினார்கள். சாகுபடிக்கு முன்பாக நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு மானியம் வழங்கும் விவரமும் தெரிவிக்கப்பட்டது.

பிரிமீய தொகை

2018-19ம் ஆண்டு நெல் பயிருக்கு விவசாயிகள் மற்றும் புதுவை அரசு காப்பீடு பிரிமீய தொகையை செலுத்திய நிலையில் மத்திய அரசு தனது பங்கான ரூ.1.57 கோடியை செலுத்தாதது குறித்தும், அந்த தொகையை செலுத்தினால்தான் விவசாயிகள் இழப்பீடு பெற முடியும். எனவே அந்த தொகையை விரைவாக செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதை ஏற்று மத்திய மந்திரியும் அதிகாரிகளிடம் அந்த தொகையை விரைவாக செலுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த தொகையை மத்திய அரசு செலுத்தும்பட்சத்தில் புதுவை விவசாயிகள் ரூ.6.54 கோடியும், காரைக்கால் விவசாயிகள் ரூ.1.44 கோடியும் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீடாக பெறும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் சுமார் 12 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள்.

Next Story