காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு + "||" + BJP burns Congress election manifesto and pushes with road block police
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதை தடுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்தனர்.
புதுச்சேரி,
தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அதன் நகலை கிழித்தெறிந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை எரித்து போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகில் நேற்று காலை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தலைமையில் மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஏராளமானோர் கூடினர்.
போராட்டத்தில் செல்வகணபதி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், அருள்முருகன், சாய் சரவணன், செயலாளர்கள் அகிலன், ரத்தினவேல், இளைஞர் அணி தலைவர் கோவேந்தன், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் விஜயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திடீர் சாலை மறியல்
போராட்டத்தின் போது சாலையின் நடுவில் 4 தகரத்தால் ஆன பேரல்களை வைத்து அதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நகல்களை போட்டு பா.ஜ.க.வினர் தீ வைத்து கொளுத்தினர்.
இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுக்க முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. உடனே ஒரு பிரிவினர் இந்திராகாந்தி சிலையை சுற்றி 4 பக்க சாலைகளிலும் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புதுவை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே தேர்தல் அறிக்கையை தீ வைத்து கொளுத்தியவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். தகரத்தால் ஆன பேரல்களை சாலையோரத்துக்கு கொண்டு சென்று ரசாயன கலவையை தெளித்து தீயை அணைத்தனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜ.க. போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.