ராகுல்காந்தி இன்று திருப்பூர் வருகை பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) திருப்பூர் வருகிறார். இதையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி வருகை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக கோவையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மாலை 3.30 மணிக்கு அவினாசி வருகிறார். அங்கு புதிய பஸ் நிலையத்தில் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு அவர் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு அனுப்பர்பாளையம் வரும் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கும் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார்.. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் உள்ள குமரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.
மத்திய பாதுகாப்பு படை
அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் செய்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
ராகுல்காந்தி திருப்பூர் வருவதையொட்டி திருப்பூர் குமரன் நினைவிடம் சுத்தம் செய்யப்பட்டது. கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று காலை மத்திய பாதுகாப்பு படை போலீஸ் துணை கமாண்டன்ட் கணேஷ் பிரதாப் சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கூட்டம் நடக்கும் மேடை, வரும் பாதை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மத்திய உளவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசார் ஆண்டனி உடன் இருந்தார். ராகுல்காந்தி வரும்போது 16 பேர் கொண்ட மத்திய பாதுகாப்பு படையினர் அவருடன் இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இதுதவிர திருப்பூர் மாநகர காவல்துறை சார்பிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
Related Tags :
Next Story