திருச்சியில் கொடூரம்: குழந்தைகள் கண் முன்னே பெண் அடித்துக்கொலை; கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சியில் குழந்தைகள் முன்பே பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
புரோட்டா மாஸ்டர்
திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸ் செங்குளத்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசீலன் (வயது 27). இவர், தில்லைநகர் பகுதியில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் மன்னார்குடி ஆகும். மதுகுடிக்கும் பழக்கம் உடையவர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். திருச்சியில் வேலை செய்வதால் தில்லை நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு சாய் பிரசாத் (5) என்ற மகனும், கவிநிலா (2) என்ற மகளும் உள்ளனர்.
செல்போன் பேச்சால் தகராறு
கடந்த சில மாதங்களாக ராஜேஸ்வரி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதை கவனித்த தவசீலன், தனது மனைவியை கண்டித்துள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களாக மன்னார்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்லலாம் என மனைவியை தவசீலன் அழைத்துள்ளார். அதற்கு ராஜேஸ்வரி மறுக்கவே, கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கட்டையால் அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தவசீலன், மனைவி ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர்களது வீட்டின் அருகில் உள்ள ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா மற்றும் அவரது குடும்பத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஆனால், நள்ளிரவில் மனைவி மீது சந்தேகப்பட்டு மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 குழந்தைகளும் அழத்தொடங்கினர். ஆனாலும் கணவன், மனைவி சண்டை தீரவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தவசீலன், 2 குழந்தைகள் கண்முன்னே மனைவி ராஜேஸ்வரியை கட்டையால் தாக்கியும், கைகளால் கழுத்தை நெரித்தும் கொலை செய்து விட்டு வீட்டின் வெளியே கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
தாயை எழுப்பிய குழந்தைகள்
வீட்டின் தரையில் அசைவின்றி கிடந்த தாய் ராஜேஸ்வரி உடலைப் பார்த்து 2 குழந்தைகளும் 'அம்மா எழுந்திரு' என சத்தம் போட்டு அழுதனர். வீடு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், அக்குழந்தைகளால் வெளியேவும் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சகுந்தலா, வழக்கம்போல் அதிகாலை எழுந்து வெளியே வந்தார். அப்போது ராஜேஸ்வரி வீட்டில் இருந்து டி.வி.யில் பாடல் சத்தம் அதிக அளவில் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் வீட்டின் வெளிப்புற கதவு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்து கதவைத் திறந்து பார்த்தபோது, தரையில் ராஜேஸ்வரி ரத்தக் கறையுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தாயின் உடல் அருகே குழந்தைகள் இருவரும் அழுதபடி நின்றுகொண்டிருந்தனர்.
போலீசார் விசாரணை
உடனே இதுபற்றி தில்லை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிறுவன் சாய்பிரசாத்திடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவன் தனது தந்தை, தாயை அடித்ததாக கூறினான். பின்னர் ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மனைவியை கொலை செய்த தவசீலன் சொந்த ஊரான மன்னார்குடிக்கு தப்பி சென்றிருக்கலாம் என்பதால், தனிப்படை போலீசார் மன்னார்குடிக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story