தேவதானப்பட்டி அருகே காதல் தகராறில் தொழிலாளி கொலை; 4 பேரிடம் விசாரணை


தேவதானப்பட்டி அருகே காதல் தகராறில் தொழிலாளி கொலை; 4 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 24 Jan 2021 3:04 AM IST (Updated: 24 Jan 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே காதல் தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவதானப்பட்டி,

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், பாலூத்து என்ற இடம் உள்ளது. இதன் அருகில் உள்ள புதரில் கடந்த 21-ந்தேதி ஒரு ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பிணமாக கிடந்தது திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் ஆனந்தராஜ் (வயது29) என்பது தெரியவந்தது.

ஆனந்தராஜை காணவில்லை என்று கடந்த 15-ந்தேதி விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

ஆனந்தராஜை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? அவர் ஏன் மேல்மங்கலம் பகுதிக்கு வந்தார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் போலீசாருக்கு எழுந்தன. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், காதலியை பார்க்க வந்த இடத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் காதலித்ததாக கூறப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு போலீசார் சென்ற போது அங்கு வீடு பூட்டி இருந்தது. இதனால், போலீசாருக்கு சந்தேகம் மேலும் வலுத்தது.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் பெற்றோர், தம்பி உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் மற்றும் அவருடைய உறவினர்கள் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆனந்தராஜ் தனது காதலியை பார்க்க இங்கு தானாக வந்தாரா? அல்லது வேறு யாராலும் அழைத்து வரப்பட்டாரா? என்று தெரியவில்லை. சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை நடத்திய விசாரணையில் காதல் தகராறில் கொலை நடந்து இருப்பதாக தெரிகிறது. கொலையாளிகள் சிக்கினால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்." என்றார்.

Next Story