பாளையங்கோட்டை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு: 2 சிறுவர்களை காப்பாற்றியவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
பாளையங்கோட்டை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். 2 சிறுவர்களை உயிருடன் மீட்டவரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்
நாகர்கோவில் அருகே உள்ள கீழ மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன். இவருடைய குடும்பத்தினர் நேற்று முன்தினம் ஒரு வேனில் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். மாலையில் அவர்கள் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சுதர்சனின் மகன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஜோதிமணி (வயது 17) மற்றும் உறவினர்கள் சிறுவர்கள் கவுதம், கவுசிக் ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் தாமிரபரணி ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்த முத்தையா உள்ளிட்டோர் ஆற்றுக்குள் இறங்கி கவுதம், கவுசிக் ஆகிய 2 பேரையும் காப்பாற்றினர். ஆனால் ஜோதிமணியை மட்டும் காணவில்லை. அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
பிணமாக மீட்பு
இதுபற்றி தகவல் அறிந்த கங்கைகொண்டான், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, ஜோதிமணியை ேதடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. அப்போது அங்குள்ள தடுப்பணை பகுதியில் ஜோதிமணி உடல் சிக்கி இருந்தது. அதனை அந்த பகுதிக்கு குளிக்க சென்ற பொதுமக்களும், தீயணைப்பு படையினரும் பார்த்து அவரது உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
இதற்கிடையே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுவர்களை சீவலப்பேரி பகுதியை சேர்ந்த முத்தையா தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் இறங்கி காப்பாற்றிய விவரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் முத்தையாவை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Related Tags :
Next Story