நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் மீட்பு கடலோர காவல் படையினர் நடவடிக்கை


நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் மீட்பு கடலோர காவல் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2021 7:05 AM IST (Updated: 24 Jan 2021 7:05 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 7 பேரை, கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியை சேர்ந்த ராஜ்பயாஸ் என்பவருக்கு சொந்தமான சிறிய ரக சரக்கு கப்பலில், தூத்துக்குடியில் இருந்து 206 மெட்ரிக் டன் ஜல்லி கற்கள் ஏற்றப்பட்டு லட்சத்தீவுகளில் உள்ள கவராட்டி பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

சரக்கு கப்பல் நேற்று முன்தினம் காலை கல்பெனி தீவுக்கு மேற்கே 15 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜின் பழுதானது. மேலும், கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால் கப்பலில் இருந்த 7 மீனவர்களும் உடனடியாக தூத்துக்குடியில் உள்ள கப்பல் உரிமையாளர் ராஜ் பயாஸுக்கும், கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

7 பேர் பத்திரமாக மீட்பு

இதையெடுத்து கவராட்டி தீவு கடலோர காவல் படைக்கு, தூத்துக்குடி கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்து படகை மீட்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கொச்சியில் இருந்து சிறிய ரக விமானம் வரவழைக்கப்பட்டு பழுதான கப்பலை தேடும் பணி நடைபெற்றது. இதற்கிடையே கல்பெனி தீவில் இருந்து மேற்கே 31 கடல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் தண்ணீரில் மூழ்கும் நிலையில் இருப்பதை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு சென்று கப்பலில் இருந்த 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். சரக்கு கப்பல் சிறிது நேரத்தில் மூழ்கிவிட்டது.

மீட்கப்பட்ட மீனவர்கள் 7 பேரையும் கடலோர காவல் படையினர் கவராட்டி தீவு போலீசாரிடம் நேற்று அதிகாலை ஒப்படைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் உரிய விசாரணைக்கு பிறகு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.

Next Story