கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Jan 2021 3:08 AM GMT (Updated: 24 Jan 2021 3:08 AM GMT)

கும்பகோணம் ஏ.சி. சர்வீஸ் சென்டர் கடையின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை- ரூ. 3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கும்பகோணம்,

கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் சம்பத்குமார் (வயது 34). இவர் கும்பகோணம் மேலக்காவேரி சுவாமிமலை மெயின் ரோடு பகுதியில் ஏ.சி. சர்வீஸ் சென்டர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சம்பத்குமார் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை சம்பத்குமார் கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கேமராவில் பதிவு

இதுகுறித்து சம்பத்குமார் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இரவு நேரத்தில் மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை கொண்டு போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story