கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேட்டில் தொல்லியல் துறையின் மூலம் நடைபெறும் அகழ்வாராய்ச்சி


கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேட்டில் தொல்லியல் துறையின் மூலம் நடைபெறும் அகழ்வாராய்ச்சி
x
கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேட்டில் தொல்லியல் துறையின் மூலம் நடைபெறும் அகழ்வாராய்ச்சி
தினத்தந்தி 24 Jan 2021 9:12 AM IST (Updated: 24 Jan 2021 9:12 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்ட சோழபுரம்-மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி தொடர்பான பணிகளை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அகழ்வாராய்ச்சி ஆய்வு பணி
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை மூலம் அகழ்வராய்ச்சி செய்வதற்காக தகுதியான இடங்கள் கண்டறிவது குறித்து கேமரா வசதியுடன் கூடிய ஆளில்லா விமானம் மற்றும் பல்வேறு அறிவியல் கருவிகள் மூலம் ஆய்வுபணி நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த பணியில் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாளிகைமேட்டில் தொல்லியல் துறையினர் மூலம் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தொடர்பான பணிகளை மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

3 பகுதிகளில்...
பின்னர் அவர்கூறியதாவது:-
தமிழ்நாடு தொல்லியல்துறை மூலம் கீழடி ஆதிச்சநல்லூர், சிவகலை மற்றும் கொடுமலையை தொடர்ந்து, தற்போது கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்க உள்ளது. இந்த பகுதிகளில் 1980, 81, 85, 87, 91 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் பலகட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 31 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ராஜேந்திரசோழன் ஆண்ட பகுதிகளான மாளிகைமேடு, மண்மலை, குருவாலப்பர்கோவில், பொன்னேரி மதகு உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டது.

பிப்ரவரி 2-வது வாரம்
இந்த ஆய்வின்போது, பானை, கூரை ஓடுகள், இரும்பு ஆணி, அலங்காரம் செய்யப்பட்ட கற்கல், வளையல் துண்டுகள், மணிகள், யானை தந்தத்தால் ஆன பொருட்கள், நாணயங்கள், மண்பாண்ட ஓடுகள், சீனநாட்டு ஓடுகள் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டன. இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் ஆள்இல்லாத விமானம் மூலம் தரைப்பகுதிகளில் அமைந்துள்ள பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-வது வாரம் முதல் பல்வேறு கட்ட அகழாய்வுகள் நடைபெறவுள்ளன. இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தின் தொன்மையும் இப்பகுதியில் வாழ்ந்த முன்னோர்கள் குறித்த வரலாறும் கிடைக்க பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது, உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், உடையார் பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, அகழ்வாராய்ச்சி துணை இயக்குநர் சிவானந்தம், தாசில்தார் கலைவாணன், வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Next Story