ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி, விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன திருட்டு; வாலிபர் கைது
ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது போல் நாடகமாடி விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் நூதன முறையில் திருடப்பட்டது.
பணம் எடுப்பது போல் நாடகமாடி
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 53). விவசாயி. இவர் கடந்த 16-ந்தேதி காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். சந்திரனுக்கு பணம் எடுக்க தெரியாததால் அருகில் நின்று கொண்டிருந்த நபரிடம் பணம் எடுத்து தருமாறு தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி ஒரு போலியான ஏ.டி.எம். கார்டை சந்திரனிடம் வழங்கியுள்ளார்.
ரூ.40 ஆயிரம் திருட்டு
அந்த நபர் சந்திரனின் ஒரிஜினல் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை நூதன முறையில் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரன் உடனடியாக தன்னை ஏமாற்றிய நபர் குறித்த விவரங்களுடன் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.
கைது
இந்தநிலையில் ஏகாம்பர நாதர் சன்னதி தெரு, அரசு காத்தம்மன் கோவில் எதிரில் உள்ள ஏ.டி.எம்.மில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தக்கோலம் பழனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை வயது (26) என்பதும் ஏ.டி.எம.. கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரம் திருடியதையும் ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து அவரிடம் இருந்து 11 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.36 ஆயிரத்து 500, இரு சக்கர வாகனம் போன்றவற்றை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட ஏழுமலையை காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story