விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்


விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2021 10:49 AM IST (Updated: 28 Jan 2021 10:49 AM IST)
t-max-icont-min-icon

மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 மாணவிகள் 250 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக தற்போது பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும் மேற்கண்ட பள்ளியின் மாணவிகள் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் நேரில் கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் மடிக்கணினி வழங்கக்கோரி தாங்கள் படித்த கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை நேற்று மாணவிகள் திடீரென முற்றுகையிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மேற்கண்ட கல்வியாண்டில் தங்களுடன் படித்த பிற அரசு பள்ளிகளில் மடிக்கணினி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாகவும், தற்போது கல்லூரிகளில் 3-ம் ஆண்டு படித்து வரும் தங்களிடம் மடிக்கணினி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதிலும், கேம்பஸ் இண்டர்வியூக்களில் பங்கேற்பதிலும் கடுமையான சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு மடிக்கணினி வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனுவை பொறுப்பு தலைமையாசிரிடம் கொடுத்தனர். இதனை பெற்று கொண்ட அரசு பள்ளி நிர்வாகத்தினர், கூடிய விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story