தமிழகத்தில் முதல் அமைச்சரின் தனிப்பிரிவு தி.மு.க. ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது; திருச்சியில் கே.என்.நேரு பேட்டி
தமிழகத்தில் முதல் அமைச்சரின் தனிப்பிரிவு தி.மு.க. ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது என்று திருச்சியில் கே.என்.நேரு கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க தேர்தல் ஆணையம் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த எந்திரத்தில் உள்ள பழைய பதிவுகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அழிக்கும் பணி தொழில் நுட்ப பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியினை தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் கே.என்.நேரு கூறியதாவது:-
பொதுமக்களின் குறைகளை களைய தனி இலாகா உருவாக்குவோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்களது ஆட்சியில் குறைகளை களைய முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு வைத்ததாக சொல்கிறார். முதல்- அமைச்சரின் தனிப்பிரிவு தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது. திருச்சியில் நடைபெற உள்ள மாநில தி.மு.க. மாநாட்டிற்கான மைதானம் அமைக்கும் பணி முடிந்து விட்டது. மாநாட்டு தேதியை மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1 அல்லது 2-ந் தேதி அறிவிப்பார். தேர்தல் கூட்டணி குறித்து ஸ்டாலின்தான் முடிவெடுத்து அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story