உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மொட்டை அடித்து காத்திருப்பு போராட்டம்
காங்கேயம் அருகே உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மொட்டை அடித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்மின்கோபுரம்
விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டத்தை செயல்படுத்த விளை நிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்கப்படுகிறது. இதனால் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே உயர் அழுத்த மின்சாரத்தை சாலையோரம் கேபிள் மூலமாக கொண்டு செல்ல வலியுறுத்தி, உயர்மின்கோபுரம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகள், மற்றும் தமிழகவிவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் காங்கேயம் அருகே படியூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி அரை நிர்வாண போராட்டம், கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டம், ரத்தத்தில் உயர்மின்கோபுரம் வேண்டாம் என எழுதி எதிர்ப்பு, கண்களை கட்டிக்கொண்டு போராட்டம், நிலத்தின் பட்டா நகல் எரித்து எதிர்ப்பு, கால்நடைகளுடன் போராட்டம், தென்னை மரக்கன்றுகளுக்கு பூஜை செய்து போராட்டம், முருகன் படம் வைத்து போராட்டம், மணி அடித்தும், பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பியும் போராட்டம் என பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மொட்டை அடித்து...
அந்த வகையில் 11-வது நாளான நேற்று மதியம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ள விவசாயிகள் கூறியதாவது:-
விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்திற்கு ஒவ்வொரு முறையில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அரசாணை எண் 54 அனைத்து மாவட்டங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள 38 வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story