அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2021 2:12 AM GMT (Updated: 31 Jan 2021 2:15 AM GMT)

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பெரம்பலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., எச்.எம்.எஸ்., ஏ.ஏ.எல்.எப்., எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

Next Story