குழந்தை வேலப்பர் கோவிலில் தேரோட்ட திருவிழா


குழந்தை வேலப்பர் கோவிலில் தேரோட்ட திருவிழா
x
தினத்தந்தி 31 Jan 2021 11:09 AM IST (Updated: 31 Jan 2021 11:09 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே பூம்பாறையில் பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. 

பழமையான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டிற்கான தேரோட்ட திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. 


கொடியேற்றத்தையொட்டி பாரம்பரிய முறைப்படி இசை வாத்தியங்கள் முழங்க கம்பத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

இதையடுத்து மாலையில் சேவல் வாகனத்தில் குழந்தை வேலப்பர் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்


திருவிழாவின் 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்ன வாகனத்தில் குழந்தை வேலப்பர் எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.

 1-ந்தேதி மயில் வாகனத்திலும், 2-ந்தேதி காளை வாகனத்திலும், 3-ந்தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 4-ந்தேதி பூத வாகனத்திலும், 5-ந்தேதி சிங்க வாகனத்திலும், 6-ந்தேதி யானை வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 


திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி கோவிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நிறைவடைந்தவுடன் பூந்தேரில் சாமி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 

அதைத்தொடர்ந்து மறுநாள் 8-ந்தேதி குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்று, திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பூம்பாறை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Next Story