உல்லாசத்துக்கு மறுத்த பெண் அடித்துக்கொலை
பட்டுக்கோட்டையில்,மது அருந்தியபோது உல்லாசத்துக்கு மறுத்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கஞ்சா வியாபாரி கைது
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில், மது அருந்தியபோது உல்லாசத்துக்கு மறுத்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
மது அருந்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரை சேர்ந்தவர்கள் ராஜா(வயது 35), செல்வி(32). இவர்கள் இருவரும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் தெருக்களில் கிடக்கும் காகிதம், பாட்டில்கள் சேகரித்து விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர். பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் அரசு பள்ளி அருகே இவர்கள் இரவில் தங்கி இருநது வந்தனர்.
அப்போது இவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த காகிதம், பாட்டில்களை சேகரித்து விற்கும் அருணகிரி(53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அருணகிரி அந்த பகுதியில் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜா, செல்வி, அருணகிரி ஆகிய 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
உல்லாசத்துக்கு அழைத்தார்
அப்போது மதுபோதையில் இருந்த அருணகிரி, செல்வியை உல்லாசத்துக்கு அழைத்தார். இதற்கு செல்வி மறுப்பு தெரிவித்தார். இதைக்கண்ட ராஜா ஆத்திரம் அடைந்து அருணகிரியை தாக்கினார்.
பதிலுக்கு அருணகிரி அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராஜா, செல்வி ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கினார்.
பரிதாப சாவு
இதில் பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா படுகாயம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருணகிரி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ராஜா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது
இது குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருணகிரியை தேடி வந்தனர். இந்த நிலையில் அருணகிரி ஆலத்தூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருணகிரியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருணகிரி பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உல்லாசத்துக்கு மறுத்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story