கல்வி, விவசாய கடன் ரத்து செய்யப்படும், மு.க.ஸ்டாலின்


கல்வி, விவசாய கடன் ரத்து செய்யப்படும்,  மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 31 Jan 2021 11:27 AM IST (Updated: 31 Jan 2021 11:27 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கல்வி, விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று பள்ளிகொண்டாவில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அணைக்கட்டு

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கல்வி, விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று பள்ளிகொண்டாவில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் திட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று  திருவண்ணாமலையில் தொடங்கினார்.

இதையடுத்து 2-வது நாள் நிகழ்ச்சியாக இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே கந்தநேரியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடந்தது.

இதனையொட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு கரும்பு, வாழைகளுடன் தி.மு.க.கொடிகளும் கட்டப்பட்டு இருந்தன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் காலை முதலே வந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். மனு வாங்குவதற்காக ஏராளமான கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றதும் அதற்கான ரசீதும் வழங்கப்பட்டது.

 மனுக்கள் எழுதி கொடுப்பதற்கும், பதிவு செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவை காண 6 இடங்களில் பெரிய அளவிலான திரைகள் வைக்கப்பட்டு அதில் ஒளிபரப்பப்பட்டன.

வெள்ளி வீரவாள் பரிசளிப்பு

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 10.45 மணியளவில் வந்தார். அவருக்கு வேலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைைமயில் தி.மு.க.நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்து மேடைக்கு அழைத்து சென்றனர். 

அதன்பின் நிகழ்ச்சிகள் தொடங்கின. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் பெட்டியில் போடப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பெட்டியை பூட்டி ‘சீல்’ வைத்தார். மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் வெள்ளி வீரவாள் பரிசளித்தார்.

தனி வாரியம்

நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பிறரின் நம்பிக்கையை பெறுவது மனிதனின் மாபெரும் சொத்தாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடியவர் என நம்பி இங்கு வந்திருக்கிறீர்கள். இதை நான் எனது சொத்தாக கருதுகிறேன். அந்த நம்பிக்கையை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். நாட்டு மக்களுக்கு 100 சதவீதம் உண்மையாக இருப்பேன். 

நேற்று வேலூரில் பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறந்து வைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன். விடுதலைக்கான அடையாளம் வேலூர். இங்கு உங்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

சொன்னதை தான் செய்வேன்... செய்வதை தான் சொல்வேன்... இதன் அடிப்படையில் தான் 100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்ப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளேன். 

தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் வாங்கும் மனுக்கள் குறித்து விசாரணை நடத்த தனி வாரியம், இலாகா அமைக்கப்படும். அந்த துறையின் மூலம் மாவட்ட ரீதியாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். 

தொகுதி வாரியாக முகாம்கள் அமைத்து பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி நிறைவேற்றி தருவோம். அதாவது அ.தி.மு.க. அரசு செய்ய தவறியவற்றை தி.மு.க. நிச்சயமாக செய்து கொடுக்கும். இப்பணி முடியும்போது தமிழகத்தில் சுமார் 1 கோடி மக்களுடைய பிரச்சினைகள் தீரும்.

வேலைவாய்ப்பு

காமராஜரை பார்த்து பெரியார், பச்சைதமிழன் என்று அழைப்பார். தமிழகம் முழுவதும் பள்ளிகளை திறந்து படிக்க பாதை அமைத்தவர் காமராஜர். அதுபோல் கலைஞரை பொக்கிஷம் என்று அழைத்தார். அவர்களின் வழியில் ஆட்சி நடத்துவேன்.

கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இளைஞர்களின் சக்தி வீணானது. தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்றதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். 
தமிழர்களை தன்னிறைவு பெற்ற மனிதர்களாக மாற்றக்கூடிய ஆட்சியாக தி.மு.க. அமையும். இதை நான் இக்கூட்டத்தில் தெரிவிக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. பின்வாங்கியது கிடையாது.

கடன்கள் ரத்து

முன்பு தி.மு.க.ஆட்சி அமைந்தபோது விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. இலவச டி.வி. வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. அந்த வரிசையில் நானும் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன். 

அதன்படி மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன், கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன், விவசாய கடன் ஆகியவற்றை ரத்து செய்வேன் என்று கூறி உள்ளேன். கடன்களை ரத்து செய்தால் அரசு கடனில் மூழ்கும் என்கிறார்கள். அவர்களிடம் நான் கூறுவது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி கடன்களை ரத்து செய்கிறார்கள். அப்பாவி மக்களுக்கு கொடுத்தால் கேள்வி கேட்கிறார்கள். 

ஏழை வாங்கிய கடனை ரத்து செய்வது கடன் ரத்து அல்ல... வாழ்க்கையில் ஓளியேற்றும் வாய்ப்பு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

விரைவில் ஆட்சி அமையும்

இலவச திட்டங்கள் என்பது கவர்ச்சி திட்டங்கள் அல்ல. மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் திட்டங்கள். மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவது தான் தி.மு.க. அரசு.

அ.தி.மு.க.ஆட்சியில் கடந்த 10ஆண்டுகளில் அனைத்து துறைகளும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை. எந்த தொகுதியிலும் புதிய திட்டங்கள் கிடையாது.

 முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தொகுதிகள் அனைத்தும் கேவலமாக உள்ளது. அவர்கள் தொகுதியில் கூட நல்லது செய்யவில்லை. செய்யவும் அவர்களுக்கு மனமில்லை. தி.மு.க. ஆட்சி விரைவில் அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story