ஆத்தூர் அருகே, வயலில் மாடு மேய்ந்த தகராறில் விவசாயி கொலை:‘உன்னால் முடிந்ததை பார் என்றதால் வெட்டி கொன்றேன்’; கைதான விவசாயி வாக்குமூலம்


ஆத்தூர் அருகே, வயலில் மாடு மேய்ந்த தகராறில் விவசாயி கொலை:‘உன்னால் முடிந்ததை பார் என்றதால் வெட்டி கொன்றேன்’; கைதான விவசாயி வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 Feb 2021 5:25 AM IST (Updated: 1 Feb 2021 5:25 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே வயலில் மாடு மேய்ந்த தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு விவசாயி கைது செய்யப்பட்டார்.

 உன்னால் முடிந்ததை பார் என்று கூறியதால் ஆத்திரத்தில் வெட்டி கொன்றேன் என்று கைதான விவசாயி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விவசாயி வெட்டிக்கொலை
ஆத்தூரை அடுத்த மல்லியக்கரை அருகே உள்ள கோபாலபுரம் கிராமம் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). இவர் கடந்த 29-ந் தேதி இரவு இவரது விவசாய நிலத்தின் அருகே தலையில் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் கொண்டு வரும் வழியிலேயே இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், பெரியசாமியின் விவசாய நிலத்தின் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான சந்திரசேகரன் (45) என்பவர் தான், அரிவாளால் வெட்டி பெரியசாமியை கொலை செய்தது தெரியவந்தது இதையடுத்து சந்திரசேகரனை போலீசார் அவரை கைது செய்தனர்.

வாக்குமூலம்
அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது வயலுக்கும், பெரியசாமியின் விவசாய நிலத்திற்கும் இடையே பொதுப் பாதை தொடர்பாக எங்களுக்குள் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக பலமுறை பஞ்சாயத்து பேசியும் பெரியசாமி ஒத்துவரவில்லை. மேலும் அவரது மாடுகள் எனது வயலில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. 

இது தொடர்பாக பெரியசாமியிடம் சம்பவத்தன்று இரவு கேட்டேன். பெரியசாமி அப்படி தான் எனது மாடுகள் வரும், மேயும். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் எனக்கூறினார். மேலும் இதுதொடர்பாக மீண்டும் தகராறு செய்தால் உன்னை கொல்ல தயங்க மாட்டேன் என பெரியசாமி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அரிவாளால் அவரது தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டேன்.

பின்னர் நான் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்து என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்திரசேகரன் கொரோனா பரிசோதனைக்கு பிறகு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
1 More update

Next Story