அரவக்குறிச்சியில் முட்புதர்கள் நிறைந்த பூங்காவை சுத்தம் செய்த போலீசார்


அரவக்குறிச்சியில் முட்புதர்கள் நிறைந்த பூங்காவை சுத்தம் செய்த போலீசார்
x
தினத்தந்தி 1 Feb 2021 1:04 AM GMT (Updated: 2021-02-01T06:48:59+05:30)

அரவக்குறிச்சியில் முட்புதர்கள் நிறைந்த பூங்காவை சுத்தம் செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் பின்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கும், இளைப்பாறுவதற்கும் போதுமான இடவசதி உள்ளது. இப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழையினால் அதிக அளவு செடிகொடிகளும் மற்றும் முட்புதர்களும் நிறைந்து காணப்பட்டது. இதனால்  பூங்காவின் உள்ளே யாரும் செல்ல முடியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சென்று வந்த அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் சம்பந்தப்பட்ட பூங்காவை பார்த்தார். இதையடுத்து நேற்று காலை அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட பூங்காவிற்கு மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களுடன் வந்து, பூங்காவில் முளைத்து இருந்த செடி, கொடிகள் மற்றும் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர். இதையடுத்து போலீசாரை அரவக்குறிச்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story