நத்தக்காடையூர் அரசு பள்ளியில் ஆசிரியை-மாணவனுக்கு கொரோனா வகுப்பறை மூடப்பட்டது


நத்தக்காடையூர் அரசு பள்ளியில்  ஆசிரியை-மாணவனுக்கு கொரோனா வகுப்பறை மூடப்பட்டது
x
தினத்தந்தி 1 Feb 2021 6:35 PM GMT (Updated: 1 Feb 2021 6:35 PM GMT)

நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை மற்றும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வகுப்பறை மூடப்பட்டது.

நத்தக்காடையூர் அரசு பள்ளியில் 
ஆசிரியை-மாணவனுக்கு கொரோனா
வகுப்பறை மூடப்பட்டது
முத்தூர்:
நத்தக்காடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை மற்றும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வகுப்பறை மூடப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மாணவர்களின் எதிர்கால கல்வி நலன் கருதி கடந்த மாதம் 19-ந்தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 
அதன்படி திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் தளபதி அர்ஜுன மன்றாடியார் ஞாபகார்த்த அரசு மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியை-மாணவனுக்கு கொரோனா
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் இந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் அந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியிடப்பட்டது. 
இதில் அந்த பள்ளியில் பணிபுரியும் நத்தக்காடையூர் அருகே உள்ள புதுசக்கரபாளையத்தை சேர்ந்த 47 வயது ஆசிரியை ஒருவருக்கும், சித்தம்பலம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவே நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் உடனடியாக இந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியை அறை, மாணவன் இருந்த வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் பொது சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவன் பயின்ற வகுப்பறை மூடப்பட்டது.
இன்று மருத்துவ பரிசோதனை
மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியை, மாணவன் இருவரும் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்தினர், மாணவன் குடும்பத்தினர், இதர ஆசிரிய -ஆசிரியைகள் மற்றும் இதுவரை கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்படாத மாணவ- மாணவிகள் ஆகியோருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 
இந்த சம்பவம் நத்தக்காடையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story