உங்கள் கால்களை பற்றி கேட்டுக்கொள்கிறேன் ‘ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்காதீர்கள்’- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சு


உங்கள் கால்களை பற்றி கேட்டுக்கொள்கிறேன் ‘ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்காதீர்கள்’- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சு
x
தினத்தந்தி 1 Feb 2021 11:47 PM GMT (Updated: 1 Feb 2021 11:47 PM GMT)

உங்கள் கால்களை பற்றி கேட்டுக்கொள்கிறேன். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்காதீர்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார்.

ஆலோசனை கூட்டம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். மண்டலம் வாரியாக நடைபெறும் இந்த கூட்டம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நேற்று நடந்தது. கொங்கு வடக்கு மண்டல  மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமன நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது.கூட்டத்துக்கு மண்டல அமைப்பு செயலாளர் கே.சுரேஷ் காந்தி தலைமை தாங்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் எம்.குருநாதன் வரவேற்று பேசினார்.

முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்...
கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
சாதி மத பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு விட்டது. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொருளாதாரம் சீர்குலைந்து உள்ளது. இந்த நேரத்தில் மக்கள் அமைதியாக வாழவும், பொருளாதாரம் உயரவும் மாற்றம் வேண்டும். கடந்த காலங்களைப்போன்று, இப்போதும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து செயல்படுகிறது.

உழைக்க வேண்டும்
நாம் இன்னும் 2 அல்லது 3 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்காக கட்சி நடத்துவதா? என்று கட்சி நிர்வாகிகளாகிய நீங்கள் தொடர்ந்து என்னிடம் கேட்கிறீர்கள். நான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று நீங்கள் நினைப்பதாக தெரிவிக்கிறீர்கள். ஆனால், அதற்கு உரிய உழைப்பு அனைவரிடமும் இருக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி என்பது தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றுதான் தொடங்கப்படுகிறது.

 தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பெரிய கட்சிகளை தவிர 234 தொகுதிகளிலும் கட்சிக்கு உறுப்பினர்கள் திரளாக இருக்கும் ஒரே இயக்கம் சமத்துவ மக்கள் கட்சிதான். ஆனால், ஏன் நீங்கள் நினைப்பது நடக்கவில்லை. என்னை நடிகராகவே பார்த்து அப்படியே செயல்படுகிறீர்கள். ரசிகர்களாக, அமைப்பு ரீதியாக உங்கள் செயல்பாடுகள் மிகவும் திருப்தியாக இருக்கிறது. 
ஆனால், அரசியல் ரீதியாக இன்னும் நாம் உழைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆருடன்...
கலைஞர் கருணாநிதி என்னை மேல்சபை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். அவரை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க மாட்டேன். பின்னர் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து இன்று வரை நீடித்து வருகிறேன். 1977-ம் ஆண்டு தி.மு.க. மீது எம்.ஜி.ஆர். புகார் தெரிவித்து ஆளுநர் அலுவலகம் நோக்கி சென்றபோது அவருடன் எனது சித்தப்பாவும் சென்றார். அப்போது எம்.ஜி.ஆருடன் சென்று இந்த படை போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கோஷம் எழுப்பிய இளைஞன்தான் இந்த சரத்குமார். எம்.ஜி.ஆருடன் எனது அரசியல் பயணத்தை அப்போதே தொடங்கி விட்டேன்.
நடிப்பு எனது தொழில். எனவேதான் இப்போது முகம்    மறைக்கும்     அளவுக்கு தாடி    வளர்த்து    இருக்கிறேன். டைரக்டர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 63 விழுப்புண்கள் பெற்ற பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்து முடித்ததும் தாடியை எடுத்து விடுவேன்.

பதவி தேடி வரும்
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் நாம் விரும்பும் இடங்களை தருவார்கள் என்று நம்புகிறேன். எந்த சூழலாக இருந்தாலும் உழைப்பை நம்பி இருக்க வேண்டும். பிறந்த அனைவரும் வெற்றி பெறுவதற்காகவே வாழ்கிறோம். ஒரு மனிதன் பெற்ற வெற்றியைவிட, அவன் தோல்வி அடைந்தபோது எத்தனை முறை மீண்டும் எழுந்து வந்து போராடி இருக்கிறான் என்பதுதான் முக்கியம். நாம் உழைத்துக்கொண்டே இருந்தால் பதவிகள் நம்மை தேடி வரும். பதவி இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்யும் அதிகாரம் கைக்கு வரும். மகளிர் அதிக அளவில் பொதுப்பணிக்கு வரவேண்டும்.

ஓட்டுக்கு பணம்
கடந்த 2020 கடினமாக இருந்தது என்பதற்காக ஓட்டுக்கு பணம் தந்தால் யாரும் வாங்கி விடாதீர்கள் என்று உங்கள் கால்களை பற்றி கேட்டுக்கொள்கிறேன். பணத்துக்காக ஓட்டு போட்டால் நல்ல ஜனநாயகம் மலராது. காசுக்கு ஓட்டு விற்பனை என்பது அநியாயம், அக்கிரமம். நான் எனது கட்சி சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். கொடுக்கவும் முடியாது. மாற்றம் வரவேண்டும்.
இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பேசினார்.

கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.சின்னச்சாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை நிலைய செயலாளர் டி.எஸ்.சரத்கோபி நன்றி கூறினார்.

Next Story