ஆழ்கடலில் திருமணம் செய்த என்ஜினீயர் ஜோடி மாலை மாற்றி, தாலி கட்டினார்


ஆழ்கடலில் திருமணம் செய்த என்ஜினீயர் ஜோடி மாலை மாற்றி, தாலி கட்டினார்
x
தினத்தந்தி 2 Feb 2021 3:54 AM GMT (Updated: 2021-02-02T09:24:36+05:30)

ஆழ்கடலில் என்ஜினீயர் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். கடலுக்கு அடியிலேயே மணமக்கள் இருவரும் மாலை மாற்றியதுடன், மணமகள் கழுத்தில் மணமகன் தாலியும் கட்டினார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் காகிதபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 29). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் ஆகும். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த என்ஜினீயர் சுவேதா (26) என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

நீச்சல் பயிற்சி

சின்னதுரை, கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் தனது திருமணத்தையும் வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும் என திட்டமிட்டார். தனது விருப்பத்தை மணப்பெண் சுவேதாவிடம் தெரிவித்தார்.

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சுவேதா, ஆழ்கடலில் திருமணம் செய்வதா? என்று பயந்தார். அவரை சமாதானம் செய்த சின்னதுரை, இதற்கு சம்மதிக்க வைத்தார். பின்னர் இருவீட்டு பெற்றோரிடமும் இதுபற்றி பேசினார். அவர்களும் முதலில் இதற்கு மறுத்தனர். பின்னர் அவர்களையும் சின்னதுரை சமாதானம் செய்து ஆழ்கடலில் திருமணம் செய்ய அனுமதி பெற்றார்.

ஆழ்கடலில் திருமணம்

இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்திடம் தனது திருமண திட்டங்கள் குறித்து சின்னதுரை தெரிவித்தார். இதையடுத்து இவர்களின் திருமண ஏற்பாடுகளை அரவிந்த் செய்தார். சின்னதுரை ஆழ்கடலில் இறங்கும் பயிற்சி பெற்றவர். ஆனால் சுவேதாவுக்கு இதுபற்றி பயிற்சி இல்லாததால் அவருக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து என்ஜினீயர்களான சின்னதுரை- சுவேதா திருமணம் நேற்று இந்து முறைபடி சென்னையை அடுத்த நீலாங்கரை கடற்கரையில் இருந்து 4½ கிலோ மீட்டர் தூரம் சென்று வங்காள விரிகுடாவின் நடுக்கடலில் 60 அடி ஆழத்தில் நடைபெற்றது.

இதற்காக கடலுக்கு அடியில் திருமண மேடைபோல் அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் கடற்கரையில் நின்றிருக்க மணமக்கள் சின்னதுரை, சுவேதா மற்றும் பயிற்சியாளர் அரவிந்த் உள்பட 12 பேர் படகில் கடலுக்குள் சென்றனர். மணமகன் சின்னதுரை வேட்டி-சட்டையும், மணமகள் சுவேதா சேலையும் அணிந்து இருந்தனர். நடுக்கடலுக்குள் சென்றதும் பாதுகாப்பு உடை, உபகரணங்களுடன் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டு இருந்த மணமேடைக்குள் இறங்கினார்.

மாலை மாற்றி, தாலி கட்டினார்

பின்னர் ஆழ்கடலில் 12 பேர் முன்னிலையில் காலை 7.15 மணியளவில் மணமகன் சின்னதுரை இந்து முறைப்படி மணமகள் சுவேதா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் மணமக்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி கொண்டனர். மணமகளுக்கு கடலுக்குள் அடியில் மணமகன் பூங்கொடுத்தும் கொடுத்தார்.

இந்தியாவில் ஆழ்கடலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இது பற்றி மணமகன் சின்னதுரை கூறும்போது, “எனது திருமணம் பற்றிய பேச்சு எழுந்தபோது, திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததும் மணப்பெண்ணிடம் பேசி இதற்கு சம்மதம் பெற்றேன். எங்களது பெற்றோரிடமும் சம்மதம் வாங்கினேன். ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

திருமணம் முடிந்து மணமக்கள் கரைக்கு திரும்பி வந்ததும், அவர்களுக்கு இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story