பொறையாறு அருகே பனங்கிழங்கு அறுவடை தீவிரம் பனை மரங்களை காக்க கோரிக்கை


பொறையாறு அருகே பனங்கிழங்கு அறுவடை தீவிரம் பனை மரங்களை காக்க கோரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2021 5:56 AM GMT (Updated: 2 Feb 2021 5:56 AM GMT)

பொறையாறு அருகே பனங்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பனை மரங்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறையாறு, 

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பண்டைய காலத்திலிருந்து பனை மரங்கள்அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இந்த பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். மேலும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இவை உடலுக்கு வலு சேர்த்து நீண்ட ஆயுள் தரும். நம் முன்னோர்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை சாப்பிட்டு திடகாத்திரமாக இருந்து உள்ளனர். இவ்வாறு பல்வேறு நன்மைகள் தரக்கூடிய பனை மரங்கள் தற்போது செங்கல் சூளைக்கும், வீடு கட்டவும் பயன்படுத்துவதற்காக அதிக அளவில் வெட்டப்படுகின்றன.

அறுவடை

இதனால் பனை மரங்கள் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால், சில இடங்களில் விவசாயிகள், பனை மரத்தால் ஏற்படும் நன்மைகள் கருதி, இந்த மரங்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். தற்போது பனங்கிழங்கு சீசன் ஆகும். மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காழியப்பநல்லூர், சிங்கனோடை, பத்துகட்டு உள்ளிட்ட பகுதிகளில் மணற்பாங்கான இடங்களில் விவசாயிகள் பனங்கிழங்கு சாகுபடி செய்தனர். தற்போது பனங்கிழங்கு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பனங்கிழங்கு சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

நார்சத்து

தற்போது இதற்கான சீசன் என்பதால் பனங்கிழங்கை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். இதுகுறித்து பனங்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:- பனை மரம் இயற்கை மருத்துவம் கொண்ட ஒரு மரமாகும். இந்த மரத்தை தமிழ் மரம் என்றும் கூறுவர். பனங்கிழங்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே விளையும். இதில் நார்சத்து, இரும்பு சத்து உள்ளது. உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரும். குடல்புண், வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல் போன்றவற்றை போக்கும். பனங்கிழங்கை அவித்து சாப்பிடுவார்கள். சிலர் அவித்த பனங்கிழங்கை வெயிலில் காய வைத்து அதை மாவாக்கி காய்ச்சி சாப்பிடுவார்கள். வாய்வு தொல்லை உள்ளவர்கள் பனங்கிழங்கை மாவாக்கி பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து சாப்பிடுவார்கள்.

சத்துமிக்க, மருத்துவ குணம் கொண்ட இந்த பனங்கிழங்கை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். நீண்ட ஆயுள் உள்ள பனை மரங்கள் தற்போது விற்பனைக்காக வெட்டப்படுகிறது. எனவே தமிழக அரசு பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story