கொல்லங்கோடு அருகே பிரபல பிக்பாக்கெட் திருடன் கைது


கொல்லங்கோடு அருகே பிரபல பிக்பாக்கெட் திருடன் கைது
x
தினத்தந்தி 2 Feb 2021 8:07 PM GMT (Updated: 2 Feb 2021 8:07 PM GMT)

கொல்லங்கோடு அருகே பிரபல பிக்பாக்கெட் திருடன் கைது செய்யப்பட்டான்.

கொல்லங்கோடு, 

கொல்லங்கோடு அருகே பிரபல பிக்பாக்கெட் திருடன் கைது செய்யப்பட்டான். டாஸ்மாக் கடையில் மதுவாங்க வரிசையில் நின்றவரிடம் கைவரிசை காட்டிய போது சிக்கினான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருவாரூர் மாவட்டம் ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 27). இவர், கொல்லங்கோடு பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பிரபாகரன், தன்னுடன் வேலை பார்க்கும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தப்பேஸ்வர் குமார் என்பவருடன் கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

அங்கு மது வாங்க வரிசையில் நின்ற போது, ஒரு வாலிபர் தப்பேஸ்வர் குமாரின் பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனை திருட முயன்றுள்ளார். சுதாரித்து கொண்ட இருவரும் அந்த வாலிபரை பிடித்து கொல்லங்கோடு போலீசில் ஒப்படைத்தனர். 

போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கேரள மாநிலம் பூந்துறை பகுதியை சேர்ந்த செய்யது அலி என்பதும், கேரளாவில் பிரபல பிக்பாக்கெட் திருடன் என்பதும் தெரியவந்தது.

மேலும், கேரளாவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சிறு வயது முதலே திருட்டு தொழிலில் ஈடுபட்டதால், கேரள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று வந்ததும், குமரி எல்லை பகுதியில் திருட்டில் ஈடுபட்டு அந்த பொருட்களை கேரளாவில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், செய்யது அலி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Next Story
  • chat