கடலூரில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்


கடலூரில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Feb 2021 8:33 PM GMT (Updated: 2 Feb 2021 8:33 PM GMT)

கடலூரில், அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சமூக வன பாதுகாவலர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என கூலி முறை பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத் துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சாலை  பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ந்தேதி (அதாவது நேற்று) சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் ரவி, வெங்கடாஜலபதி, கவியரசு, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் மனோகரன் வாழ்த்துறை வழங்கினார். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் திடீரென சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 14 பேரை கைது செய்தனர்.

Next Story